Saturday, February 24, 2007

மருதுவின் மான முழக்கம்!

வணிக வருடம் 2007 நடந்து கொண்டிருக்கிறது. 1857 ன் முதலாவது சுதந்திரப் போர் நிகழ்ந்து 150 ஆண்டுகள்! பாரதம் முழுதும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த ஒன்றுபட்ட மாபெரும் கிளர்ச்சி என்றுதான் இதனை வர்ணிக்கவேண்டும். ஏனெனில் ஆங்கிலேயன் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய ஆரம்ப நாட்களிலேயே அவனது குரல் வளையை நசுக்க நம் பிரதேசத்தவர்கள் வாளேந்தினார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுள் மருது சகோதரர்களின் பங்கு மகத்தானது. வெற்றிவேல்! வீரவேல்! என்ற வீர முழக்கம் விண்ணை முட்ட, அவர்கள் செய்த கர்ஜனை, இன்றும் அவர்கள் புகழ்பாடுகிறது.

பொன். முத்துராமலிங்கம் அவர்களால் எழுதப் பட்டு வானதி பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ள "தென்னாட்டுப் புரட்சி" நூலிலிருந்து, ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக மருதுபாண்டியர், பொது மக்களுக்கு வெளியிட்ட அறிக்கையினை இவ்விடத்தே பிரசுரம் செய்கின்றோம்.

இச் சுதந்திரப் போரின் நூற்றைம்பதாவது ஆண்டு விழா நெருங்குகிற இத்தருணத்தில் இது ஒரு பயனுள்ள வெளியீடாய் அமையும் என நம்புகிறோம்.

இந்த அறிக்கையைப் பார்ப்பவர் யாரானாலும் கவனமாகப் படிக்கவும்.

இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலும் உள்ள பார்ப்பனர், சத்திரியர், வைசியர்கள், சூத்திரர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் நாட்டிலுள்ள எல்லாப் பிரிவினருக்கும் வகுப்பினருக்கும் இந்த அறிவிப்பு கொடுக்கப் படுகிறது.

மேதகு நவாப் மகமது அலி உங்களுக்கு மத்தியில் ஐரோப்பியர்களுக்கு முட்டாள்தனமாக இடமளித்துவிட்டு அவர் விதவையைப் போல இருக்கிறார். ஐரோப்பியர்கள் நம்பிக்கை மோசம் செய்துவிட்டு ஏமாற்று வழிகளின் மூலம் அரசாட்சியைப் பிடித்துக் கொண்டனர். இங்குள்ள குடிமக்களை நாய்களாக மதித்து, ஆங்கிலேயர்கள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்ட பிரிவினர்களாகிய உங்களிடம் ஒற்றுமையும் நட்புமில்லாமல் இருக்கிறது.

ஆங்கிலேயருடைய இரட்டை வேடத்தை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளாமலிருக்கிறீகள். கொஞ்சமும் சிந்தனையின்றி ஒருவருக்கொருவர் மாறுபட்ட எண்ணங்களை வளர்த்துக் கொண்டு இந்த மண்ணின் அரசாட்சியை ஆங்கிலேயருக்கு அடிபணிந்து கொடுத்துவிட்டனர். மிகவும் இழிந்த குணம் கொண்ட ஆங்கிலேயர்களால் இந்த நாடு ஆளப்பட்டு வருவதால், இந்நாட்டுக் குடிமக்கள் ஏழைகளாகி, சோற்றுக்குப் பதில் கஞ்சியைக் குடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டசெயற்கையான துயரங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இன்னும் மக்கள் வழியறியாது இருக்கின்றனர்.

ஒருவன் ஆயிரம் ஆண்டுக் காலம் வாழ்ந்தாலும் சாவு என்பது அவனுக்கு உறுதியான ஒன்றாகும். ஆனால் புகழ் என்பது சூரியனும் சந்திரனும் இருக்குமட்டும் நிலைத்திருக்கக்கூடியது. வருங்காலத்தில் பரம்பரை அரசுரிமைகள் மேதகு ஆர்க்காடு நவாப் சுபாவுக்கும் கர்நாடக விஜய ரமண திருமலை நாயக்கருக்கும், தஞ்சாவூர் மன்னனுக்கும், மற்ற பரம்பரை உரிமை படைத்தவர்களுக்கும், தேசியப் பழக்க வழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் விரோதமின்றி வழங்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளோம். ஐரோப்பியர்கள் நவாப்பின் கீழ் அலுவலர்களாக இருந்து பணியாற்றி, அதன் மூலம் கிடைக்கும் பயனை மட்டும் அனுபவிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில ஆதிக்கம் அழிக்கப்படுமேயானால் நவாப் மேலாதிக்கத்தின் கீழ், எல்லா உரிமைகளையும் பெற்றுக் கண்ணீர்விடாது மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

நாட்டிலுள்ள ஒவ்வொருவரும், பாளையக்காரர்களும், தாங்களாகவே கிளர்ந்தெழுந்து ஆயுதமேந்தி, ஈனத்தனமான ஆங்கிலேயரின் பெயரை அறவே அகற்றும் வரை போரிட வேண்டும். அதன் பிறகே ஏழைகளும், தேவைகளால் உந்தப்பட்ட மக்களும், வாழ்க்கை வசதிகளைப் பெற்றிட இயலும். ஆனால், யாராவது ஈனப் பிறவிகளான ஆங்கிலேயர்களை நாயைப்போல் நத்திப் பிழைக்க விரும்பினால், அவர்கள் கருவருக்கப்படுவார்கள். தங்களுக்குள் மிக ஒற்றுமையாகவும் பிறரிடம் மிகவும் பணிவுடனும் நடந்து இந்த நாட்டை எவ்வாறு அடிமைப் படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள் என்பதை நாம் நன்கறிவோம். மீசையுள்ள ஆண்மக்களாகிய பிராமணர்களும், சத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், முஸ்லீம்களும் இராணுவத்தில் பணியாற்றுகின்ற சுபேதார், ஜமேதார், அவில்தார், நாயக், சிப்பாய் ஆகிய பிரிவினரும் மற்றும் ஆயுதந்தாங்கும் ஆற்றல்மிக்க அனைவரும் தங்கள் வீரத்தை நிலைநாட்டிட வேண்டும்.

இந்த இழிதகைமைப் பிறவிகளான ஆங்கிலேயர்கள் அடியோடு ஒழிக்கப்படும் வரை, எங்கெங்கே கண்டாலும் அவர்களை ஒழித்துக் கட்டுங்கள். இந்த இழிந்த பிறவிகளின் கீழ், பணிபுரிபவர்கள் இறப்புக்குப் பின்னர் நற்கதியென்பதை அடையவே மாட்டார்கள். நன்கு சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புத் தராத ஆண்மகனின் மீசை என் மறைவிடத்து மயிருக்குச் சமம். இவர்கள் கழிவையே உண்பவர்கள். இவர்களது மனைவி, மக்கள் மாற்றானுக்குச் சொந்தமானவர்கள். இவர்களின் குழந்தைகள் ஈனத்தனமான ஆங்கிலேயனுக்குக் கூட்டிக் கொடுத்ததால் பிறந்தவர்களாவர். எனவே, ஆங்கிலேயரின் ரத்தக் கலப்பற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இந்த அறிக்கையைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் பொதுமக்களிடம் எழுத்து மூலமாகவோ, செவி வழியாகவோ பரப்பிட வேண்டும். இவ்வறிக்கையைப் படித்தும் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்காதவன் காராம் பசுவை கங்கைக் கரையில் கொன்ற பாவத்துக்கு ஆளாவான். நரகத்தில் சென்று பஞ்சமா பாதகம் செய்ததற்கான தண்டனையை அனுபவிப்பான். இந்த வேண்டுகோளுக்கு ஒத்துழைக்காத முஸ்லிம்கள் பன்றியின் ரத்தத்தைக் குடித்தவராவர்.

இந்த அறிக்கையை மதிலிருந்து கிழித்தெறிபவன் பஞ்சமா பாதகம் செய்தவனாவான். இதைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் இந்த அறிக்கையின் நகல் ஒன்றினை எழுதிக் கொள்ளவும்.

ஸ்ரீ ரங்கத்திலுள்ள பெரிய மனிதர்களையும் மத குருமார்களையும், ஸ்ரீ ரங்கம் வாழ் மக்களையும் தாழ் பணிந்து வணங்குகிறேன். இந்நாட்டு மன்னர்கள் கோட்டை கொத்தளங்களையும் கிறிஸ்துவ தேவாலயங்களையும் அமைத்திருந்திருந்தினர். அந்தப் பெருமைமிக்க மன்னர்களும் ஈனத்தனமான ஆங்கிலேயரின் அநீதியான போக்கால் ஏழ்மைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பரம்பரைப் பெருமைமிக்க நீங்கள் இந்த இழிநிலைக்குக் கொண்டுவரப் பட்டிருக்கின்றீர்கள். உங்கள் ஆசியை எனக்கு வழங்குங்கள்.

இப்படிக்கு
இந்நாட்டு மன்னர்களின் ஊழியனும்
இழிபிறவிகளான ஆங்கிலேயர்களின் அசைக்க முடியாத எதிரியுமான
மருதுபாண்டியன்